புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மைலன்கோன்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு இல்லாத இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சிதிலமடைந்து தூண்கள் இடிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த தொட்டியின் அருகே வீடுகள் உள்ளன. பள்ளி மாணவர்கள், சிறுவர்- சிறுமிகள் இந்த குடிநீர் தொட்டியின் அருகே விளையாடி வருகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மனோன்மணி, மைலன்கோன்பட்டி
தூர்ந்துவரும் ஊரணி
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டி கிராமத்தில் அம்மா ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி தூர்வாரப்படாத நிலையில் தற்போது சம்புகள், புற்கள் முளைத்த நிலையில் தூர்ந்துபோய் வருகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த ஊரணியில் மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அம்மா ஊரணியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேஸ்கண்ணா, மட்டையன்பட்டி
பன்றிகள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி, திருநகர், எஸ்.கே.நகர், ஈட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகிறது. இந்த பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறி வருகிறது. சில நேரங்களில் வீடுகளுக்குள்ளேயும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மேட்டுப்பட்டி
தேங்கி நிற்கும் மழைநீர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலின் முன்பு உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அதில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருகே வண்ணாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சீப்புக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து கணபதிபுரம் விலக்கு வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் விலகி கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
முத்துசாமி, சீப்புக்காரன்பட்டி