கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம் மெயின் சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், குப்பைகள் காற்றுக்கு சாலையில் வந்து விழுகிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சசிகுமார், காதப்பாறை.
வாகன ஓட்டிகள் அவதி
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சி, காகம்பட்டியில் இருந்து நந்தவன பள்ளம் செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ெபாதுமக்கள், இனுங்கூர்.
அகற்றப்படாத மரக்கிளைகள்
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனி அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. இதன் கிளைகள் வளர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் இதன் வழியாக தினமும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் சென்று வருகின்றனர். வாகனங்கள் செல்லும்போது மரத்தின் கிளை முறிந்து விழுந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சோழன், நெய்தலூர் காலனி
மின்விளக்கு வசதி கிடைக்குமா?
கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையம் புலியூர்- மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அமைந்துள்ள பயணியர் நிழற் குடை பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து பலர் தினந்தோறும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் இங்குள்ள காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூலி வேலை செய்ய கரூர் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் பஸ்சில் இருந்து இறங்கி செல்லும் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சி பஸ் நிறுத்த பகுதி பயணிகள் நிழல் குடை அருகே மின்விளக்கு வசதி செய்து தருவதுடன் அங்குள்ள காலனி பகுதி வரை செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சாலை ஓரத்திலும் மின்விளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அய்யம்பாளையம்
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வேல்முருகன், நங்கவரம், கரூர்.