பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் சில நேரங்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், சிறுகன்பூர்.
ஆபத்தான வேகத்தடை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் காரை கிராமம் காலனி தெரு அருகே உள்ள புதுக்குறிச்சி இணைப்பு சாலையில் ஒரு பெரிய வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அவர்கள் அருகே வந்து திடீரென பிரேக் அடிப்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காரை
பாதுகாப்பற்ற சூழல்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நக்கசேலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புறவழிச்சாலை அமைப்பதற்காக இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலகுரு, நக்கசேலம்
பன்றிகளால் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி சாலையில் போடுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிட்ட பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துறைமங்கலம்
எரியாத தெருவிளக்குகள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுவேட்டகுடி ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் மக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்லும் வகையில் சாலை ஓரத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் கடந்த சிலநாட்களாக இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கலாநிதி, புதுவேட்டக்குடி