அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வெளியேறும் கழிவுநீரால் அவதி
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட செந்துறை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட விளையாட்டு அரங்கம், அரசு கல்லூரி மாணவிகள் விடுதி இவை அனைத்துக்கும் நுழைவாயிலாக உள்ள இடத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஒரு மாதமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் அரசு கல்லூரி விடுதிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், விளையாட்டு அரங்கிற்கு வரும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
சேறும், சகதியுமாக மாறிய சாலை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் காலனித்தெரு 6-வது வார்டில் மழைநீர் செல்ல வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி வீதியில் சாலை சேறும், சகதிமாய் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீர் தேங்காத வகையில் வீதியின் இருபுறமும் வாய்க்கால் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், தா.பழூர்