புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா பூவலூர் வடவயல் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் அருகில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அப்துல் ரகுமான், பூவலூர் வடவயல்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், இடையாத்திமங்களம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுவதுடன், விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலைஉள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குணபாலன், இடையாத்திமங்களம்.
வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் சீமைக்கருவேல முள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மண்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வங்காரம்பட்டியில் இருந்து வடுகப்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஓரமாக செல்லும்போது சீமைக்கருவேல முள் வாகன ஓட்டிகளை பதம் பார்ப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வங்காரம்பட்டியில் இருந்து வடுகபட்டி செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வங்காரம்பட்டி.
பஸ் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் முதல் கட்டுமாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதி புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தது. மேற்கண்ட சாலையில் கிருஷ்ணாஜிபட்டினத்திற்கு அடுத்து உள் புறமாக காரக்கோட்டை என்ற ஊர் உள்ளது. அந்த ஊரில் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து 3-வது கிலோ மீட்டரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், 5-வது கிலோ மீட்டரில் அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. கிருஷ்ணாஜிபட்டினத்திற்கு அடுத்து கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து காரக்கோட்டைக்கு செல்லும் பாதையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருதி இப்பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஹபிபுல்லா, காரக்கோட்டை.
எலும்புக்கூடான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள சொக்கநாதப்பட்டி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள சாலையின் அருகே மின்கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சொக்கநாதப்பட்டி.