< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 Dec 2022 12:27 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்தி நகர், அண்ணாநகர், வேலூர் சாலை, முல்லை நகர் பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள், முதியவர்களை, துரத்தி சென்று கடித்து வருகிறது. மேலும் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புபவர்களை பின்னால் துரத்தி செல்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக் கொள்கிறோம்.

ரமேஷ், வேலாயுதம்பாளையம்.

சுகாதார வளாகம் கட்டித்தரப்படுமா?

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெண்களின் நலன் கருதி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது சுகாதார வளாகம் பழுதடைந்து அதை பயன்படாமல் இருக்கிறது. இதனால் சுகாதார வளாகம் முழுவதும் பல்வேறு வகையான செடி, கொடிகள் மற்றும் சீமை கருவேலமரங்கள் முளைத்து சுகாதார வளாகத்தை மூடி மறைத்துள்ளது.இந்நிலையில் புதிய சுகாதார வளாகம் கட்டித் தரக்கோரி பலமுறை உள்ளாட்சித் துறை அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நொய்யல்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், புங்கோடையில் இருந்து நத்தமேடு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாகவும், தொடர் மழையின் காரணமாகவும் தார் சாலை நெடுகிலும் பழுது ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புங்கோடை.

சேறும், சகதியுமாக மாறிய பயணியர் நிழற்குடை

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த நிழல்குடையை தற்போது சர்வீஸ் சாலை அருகே சேறும், சகதியுமாக உள்ள இடத்தில் போட்டு வைத்துள்ளனர். இதன் காரணமாக நிழற்குடையின் தகரங்கள் சேற்றில் கிடப்பதால் வீணாகி வருகிறது. எனவே சேறும் சகதியுமாக உள்ள இடத்தில் கிடக்கும் பயணிகள் நிழற்குடையை மேடான பகுதியில் அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தவிட்டுப்பாளையம்.

சாலையில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள்

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் ஈரோடு- கரூர் நெடுஞ்சாலை அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் உள்ளது. இங்கு இரவு பூட்டிய உடன் அதிகாலையில் இருந்து மறுநாள் மதியம் கடை திறக்கும் வரை விடியவிடிய மதுவிற்பனை நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி சாலை ஓரத்தில் அமர்ந்து பலர் குடிக்கின்றனர். பின்னர் அவர்கள் மது பாட்டில்களை சாலையில் உடைத்து செல்கின்றனர். இதனால் சாலையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கிறது. மேலும், பிளாஸ்டிக் கவரில் கொண்டு வரும் உணவு பொருளை சாப்பிட்டு விட்டு அங்கேயே போட்டு செல்கின்றனர். அதேபோல் மதுஅருந்துபவர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு தகாத வார்த்தையால் பேசி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புன்னம்சத்திரம்.

மேலும் செய்திகள்