பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உயர் மின் கோபுரம் சரிசெய்யப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், நக்க சேலம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள உயர் மின் கோபுரம் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பாலகுரு, பழைய விராலிப்பட்டி.
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி அருகில் செல்லும் கழிவுநீர் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபு, விஜயகோபாலபுரம்.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி அரசு மேல்நிலை பள்ளி அருகே குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மோட்டார் பழுடைந்து உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ராயப்பன், மருவத்தூர்.