< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 Dec 2022 12:47 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மணல் திருட்டு தடுக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மைசூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரணிபட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த மணல் கடத்தலில் ஏறக்குறைய 15 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து டிராக்டர், மாட்டு வண்டி உதவியுடன் தினமும் இரவிலும், அதிகாலை நேரங்களிலும் மணலை கடத்தி தங்கள் குடியிருப்பு பகுதிகளில் எடுத்து வைத்து, பின்னர் வெளி மாவட்டங்களுக்கு லாரி மூலம் மணல் திருட்டு தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முருகேசன், புதுக்கோட்டை.

பாதியில் நிற்கும் தார்சாலை பணி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்திலிருந்து ஆதனக்கோட்டை தொண்டைமான்ஊரணி விலக்கு சாலை வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் பழுதடைந்த தார் சாலை புதிய தார்சாலையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அப்போது தொண்டைமான்ஊரணி விலக்கு சாலை வரை புதிய தார்சாலை போடாமல் 50 அடி தூரம் இடைவெளி விட்டு போட்டுள்ளனர். விடுபட்ட 50 அடி தூர பழுதடைந்த தார்சாலையினை புதிய தார்சாலையாக அமைத்து சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கணபதிபுரம்.

பஸ் சேவை நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, கீரனூர் அருகே உள்ள இலுப்பக்குடிப்பட்டி கிராமத்திற்குஇயக்கப்பட்டு வந்த பஸ்கள் கடந்த கொரோனா காலகட்டத்தின்போது நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த சேவை மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இளையராஜா, இலுப்பக்குடிப்பட்டி.

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், விஜயபுரம் ஊராட்சி சின்ன கடை தெரு பகுதியில் கடந்த பல நாட்களாக உயர் கோபுர மின்விளக்குகள் எரியாமல் இருந்தது. இதனை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்மின் கோபுர விளக்குகளை சரி செய்து எரிய வைத்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சந்திரசேகரன், விஜயபுரம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா கோட்டூர் ஊராட்சி கோட்டூரில் உள்ள அரையான்கண்மை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்புள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

பொதுமக்கள், கோட்டூர்.

மேலும் செய்திகள்