< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
4 Dec 2022 7:16 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அச்சுறுத்தும் தெருநாய்கள்

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள குழந்தைகள் தெருவில் விளையாடும்போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆட்டையாம்பரப்பு

குடிநீர் குழாயில் உடைப்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிந்தலவாடி ஊராட்சி, நந்தன் கோட்டை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்யுமாறு பலமுறை நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் புதிதாக அமைந்த தார்ச்சாலையை உடைத்து வெளியேறும் தண்ணீரை கழிவுநீர் வாய்க்காலில் விட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வுகான வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நந்தன் கோட்டை

சாலை புதுப்பிக்கப்படுமா?

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி காணிகளத்தூரில் சுமார் 100க்கும்- மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு கரூர்- மணப்பாறை சாலையில் கருப்பு கோவில் பிரிவில் இருந்து தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்ச்சாலை தற்போது குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என அதிக அளவில் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சென்று வருகின்றன. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குண்டும், குழியுமான இந்த சாலையை தரமான தார்சாலையாக மாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காணிகளத்தூர்

சிதிலமடைந்த கான்கிரீட் சாலை

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக கான்கிரீட் சாலை போடப்பட்டது. கான்கிரீட் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கான்கிரீட் சாலை நெடுகிலும் சிதிலமடைந்துள்ளது. மேலும் காங்கிரீட் சாலையின் இருபுறமும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக இந்த கான்கிரீட் சாலை வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், மரவாபாளையம்

தூர்வாரப்படாத வடிகால் வாய்க்கால்

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் பகுதியில் இருந்து புங்கோடை வரை உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டு இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழைக்காலங்களில் வெளியேறும் மழைநீர் ஆகியவை இந்த உபரிநீர் கால்வாய் வழியாக சென்று புங்கோடை வழியாக செல்லும் புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக உபரிநீர் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி, கொடிகள் அகற்றாமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைபெய்யும்போது மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மோகனப்பிரியா, குளத்துப்பாளையம்

மூடப்பட்ட அரசு பள்ளி

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி கவுண்டன்புதூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி குழந்தைகளின் நலன் கருதி அரசு ஆரம்பப்பள்ளி கட்டப்பட்டது. இந்த பள்ளியில் கவுண்டன்புதூர், செல்வநகர், எம்.ஜி.ஆர். நகர், செட்டித்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் படித்து வந்தனர். இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததன் காரணமாக கவுண்டன்புதூரில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்பப்பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் இந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகளை பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனால் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை நியமித்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகளை கவுண்டன்புதூர் அரசு பள்ளியில் சேர்த்து பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, கவுண்டன்புதூர்

மேலும் செய்திகள்