< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Nov 2022 6:43 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக புகழூர் நகராட்சி அதிகாரிகள் குவிந்து கிடந்த குப்பை அகற்றினர். மேலும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது எடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், இனுங்கூர் ஊராட்சி, மேல சுக்காம்பட்டியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு நீரேற்றும் ஆழ்துளை கிணற்று மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில், மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மேலசுக்காம்பட்டி.

பஸ் பயணிகள் அவதி

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், நஞ்சைபுகழூர், தவிட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் கரூர் மாவட்டத்தில் இருந்து பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் செல்லும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை. பல ஆண்டுகளாக நின்று சென்ற பஸ்கள் கூட இங்கு நிற்பதில்லை. ஏன் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச்செல்வதில்லை என்று கேட்டால், நேரமில்லை என்று ‌பதில் அளிக்கிறார்கள். இதனால் இப்பகுதி மக்கள் வெளியூர் சென்றுவர பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நீலகண்டன், நஞ்சைபுகழூர்.

தூர்வாரப்படாத கால்வாய்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே ஒரம்புப்பாளையம் பகுதியிலிருந்து கவுண்டன்புதூர், சேமங்கிசெல்வநகர் வழியாக முத்தனூர் வரை விவசாய நிலங்களில் பாய்ச்சப்படும் தண்ணீர் வெளியேறி செல்லும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. அந்த கால்வாய் மூலம் உபரி நீர் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் உபரி நீர் கால்வாயில் நெடுகிலும் ஏராளமான செடி, கொடிகள், சம்புகள் முளைத்து கால்வாயில் உபரிநீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உபரிநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நீலகண்டன், ஒரம்புப்பாளையம்.

அங்கன்வாடி மையத்தில் உரசும் மின்கம்பிகள்

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமம் சாந்துவார்பட்டியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் மின்கம்பிகள் கட்டிடத்தின் மேல் பகுதியை உரசியவாறு செல்வதினால், மழை பெய்யும்போது கட்டிடத்தில் மின்சாரம் பாயும் நிலை ஏற்படுகிறது. எனவே விபத்து நடக்கும் முன்பு இதனை சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சாந்துவார்பட்டி.

மேலும் செய்திகள்