சேலம்
தினத்தந்தி புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையம் அருகே போடிநாயக்கன்பட்டி ெரயில்வே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் அருகில் ஏரி இருப்பதால் மழை காலங்களில் பாலத்தில் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக மின் மோட்டார் பொருத்தி உள்ளனர். ஆனால் மோட்டார் அடிக்கடி பழுது அடைந்து விடுகிறது, இதனால் இந்த பாலத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது, எனவே பாலத்தில் தண்ணீர் தேங்காத வகையிலும், பாலத்தில் உள்ள சேற்றினை அகற்றி சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.சுதர்சன், ஆண்டிப்பட்டி, சேலம்.
அடிப்படை வசதி செய்து தர வேண்டுகோள்
சேலம் மேட்டூர் அணை நகராட்சி 3-வது வார்டில் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள பிணவறை அருகில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அங்கு வரும் மக்கள் அவதிப்படும் நிலையில் உள்ளனர். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஒசான்னார்ஜ், மேட்டூர்,
பஸ் வசதி வேண்டும்
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிவதாபுரம் வழியாக பெருமாம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் காலை, மாலை இருவேளையும் தாமதமாக வருகிறது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்வோர், விவசாய, கட்டுமான, விசைத்தறி கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆகியோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு உரிய நேரத்திற்கு பஸ் வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சிவதாபுரம், சேலம்.
சாலை வசதி இல்லாத பள்ளிக்கூடம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி உங்கரானஅள்ளி ஊராட்சி த.குளியனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 107 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அந்த பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் வயல்வரப்பில் நடந்து செல்கிறார்கள். சத்துணவு பொருட்களையும் தலைமீது சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இந்த பள்ளிக்கு சாலை வசதியும், அடிப்படை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், தர்மபுரி.
இருளில் மூழ்கும் ரெயில் நிலைய சாலை
தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் பயணிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ரெயில் நிலையத்திற்கு செல்லும் இருவழி சாலையில் தெற்கு பகுதியில் உள்ள சாலை போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி விடுகிறது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரத்தில் அச்சமின்றி இந்த சாலையில் சென்று வர மின்விளக்குகளை அமைக்க அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், தர்மபுரி.
எந்தநேரமும் எரியும் உயர்கோபுர மின் விளக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் மூன்று மாநிலங்களை இணைக்கும் ஜங்ஷனில் உயர் கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது. இந்த மின் விளக்கானது இரண்டு மாதங்களாக 24 மணி நேரமும் அணைக்கபடாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த உயர் கோபுர மின் விளக்கு காலை முதல் மாலை வரையும் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் இடைவிடாமல் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீணாக எரிந்து வரும் இந்த உரிய மின்விளக்கை உரிய நேரத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
-தர்மதுரை, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.