சேலம்
தினத்தந்தி புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் இடத்தில் இலவச கழிப்பிடம் உள்ளது. இங்கு துர்நாற்றம் வீசுவதால் ஓசூர், பெங்களூரு செல்ல பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி தினமும் இலவச கழிப்பிடத்தை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஓசூர்.
சாலையில் ஆபத்தான குழி
தர்மபுரி- சேலம் சாலையில் கந்தசாமி வாத்தியார் தெருவிற்கு செல்லும் சாலை பிரிகிறது. அந்த இடத்தின் அருகில் சாலையில் சுமார் ஒரு அடி அளவுக்கு ஆபத்தான குழி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு குழியை மூடி விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், தர்மபுரி.
மயானத்தில் மின்விளக்கு
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் அதிகளவில் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் உடல்களை அடக்கம் செய்ய செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மயான பகுதியில் மின்விளக்கு இல்லாததால் பொதுமக்கள் இரவு நேரத்தில் உடல்களை அடக்கம் செய்ய செல்லும்போது அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்தில் மின்விளக்கு அமைக்க மற்றும் முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், நாமகிரிப்பேட்டை, நாமக்கல்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வெள்ளார் காளிக்கவுண்டனூரில் கிராம சேவை மையம் அமைந்துள்ளது. அங்குள்ள மின்கம்பத்தில் கடந்த 6 மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. மயானத்திற்கு செல்லும் சாலை என்பதாலும், பொதுமக்கள் அதிகம் செல்லும் சாலை என்பதாலும் இரவு நேரங்களில் சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் மின்விளக்கு எரியசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிருஷ்ணன் பஞ்சு, காளிக்கவுண்டனூர், சேலம்.
போக்குவரத்துக்கு இடையூறான குப்பைத்தொட்டி
சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இ்ந்த குப்பை தொட்டியால் ஏதேனும் விபத்துக்கள் நடந்து விடுமோ என்று அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே ஏதாவது விபத்து நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த குப்பைத்தொட்டியை சாலையோரம் வைக்க வேண்டும்.
-சுந்தரம், அல்லிக்குட்டை, சேலம்.
குடிநீர் பிரச்சினை
நாமக்கல் மாவட்டம் களங்காணி கிராமத்தில் பாவடி தெருவில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து அங்குள்ள மக்களுக்கு மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அடிக்கடி குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமஜெயம், களங்காணி, நாமக்கல்.
பராமரிக்கப்படாத குடிநீர்தொட்டிகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் புதிய 1-வது வார்டு தொளசம்பட்டி பிரிவு ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அங்கு சாலையின் இருபுறமும் 2 குடிநீ்ர்தொட்டிகள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த குடிநீர்தொட்டிகளில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. மேலும் சேதமடைந்து சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்.
-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.