திருநெல்வேலி
'தினத்தந்தி' புகார் பெட்டி
|`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளால் சுகாதாரக்கேடு
நெல்லை பாளையங்கோட்டை தெற்கு முத்தாரம்மன் கோவில் தெருவில் (24-வது வார்டு) குப்பை தொட்டி இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். ரோட்டோரம் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிசாமி, பாளையங்கோட்டை.
வேகத்தடைக்கு வர்ணம் இல்லையே!
ஆத்தங்கரைபள்ளிவாசல் அருகே தோப்புவிளையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சாலைகளில் அதிகளவில் வேகத்தடைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும்.
-அந்தோணிபிச்சை, தோப்புவிளை.
அடிக்கடி உடையும் குழாய்
திசையன்விளை தாலுகா குட்டம் ஊராட்சிக்கு சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் போடப்பட்டுள்ளது. இந்த குழாயில் இடையன்குடியில் இருந்து கடகுளம் விலக்கு வரை சுமார் 2 கி.மீ. வரை போடப்பட்டுள்ள குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, குடிநீர் குழாய் அடிக்கடி உடையாத அளவுக்கு இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-சண்முகநாதன் மார்த்தாண்டன், குட்டம்.
குண்டும், குழியுமான சாலை
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் ஆவுடையானூர் மெயின்ரோட்டில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் அடிக்கடி நிலைதடுமாறி விழுந்து விடுகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
அபாயகரமான மின்கம்பம்
சாம்பவர்வடகரையில் கடையநல்லூர் ரோடு தேரடி அருகில் மின்கம்பம் சாய்ந்து நிற்கிறது. அபாயகரமான முறையில் நிற்கும் இந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஐயங்கண்ணு, சாம்பவர்வடகரை.
பாலத்தில் முட்செடிகள்
வாசுதேவநல்லூருக்கும், வெள்ளானைக்கோட்டைக்கும் இடையே கருப்பையாற்றில் (டாஸ்மாக் அருகில்) பாலம் கட்டப்பட்டது. அதில் தென்புறமும், வடபுறமும் இணைப்பு பாலம் இறங்கி தாழ்வாக உள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி விடுகிறார்கள். மேலும் பாலத்தில் முட்செடிகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இவற்றை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
-சிவபெருமாள், வாசுதேவநல்லூர்.
மேற்கூரை இல்லாத பஸ்நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்கூட மேற்கூரை இடிந்து சேதம் அடைந்து இல்லாமல் போனது. இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே நிழற்கூடத்தை சீரமைத்து தர வேண்டுகிறேன்.
-இயேசுவடியான், குலசேகரன்பட்டினம்.
தெருநாய்கள் தொல்லை
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பள்ளிப்பத்து ஊராட்சி 4, 5, 6-வது வார்டுகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கோழி, ஆடு மற்றும் மனிதர்களையும் கடிக்கிறது. ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி நாய்களை பிடிக்க கேட்டுக்கொள்கிறேன்.
-சிவநேசன், நாதன்கிணறு.
வீணாகும் குடிநீர்
கோவில்பட்டி 10-வது வார்டு காளியப்பர் தெருவில் நல்ல தண்ணீர், உப்பு தண்ணீர் குழாய்கள் உள்ளன. இதில் நல்ல தண்ணீர் குழாயில் நல்லி திறந்து மூடும் நிலையில் இல்லை. இதனால் இரவு நேரங்களில் தண்ணீர் வந்தால் வீணாக கீழே செல்கிறது. எனவே, தண்ணீர் வீணாக செல்லாத வகையில் நல்லி பொருத்த வேண்டும்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
எச்சரிக்கை பலகை தேவை
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் மேல்நிலைப்பள்ளி, தேவாலயம் அமைந்துள்ள பகுதி வழியாக சாயர்புரம் செல்லும் சாலை குறுகியதாக உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, அங்கு எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமன், புதுக்கோட்டை.