தென்காசி
'தினத்தந்தி' புகார் பெட்டி
|`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதம் அடைந்த சாலை
நெல்லை தாழையூத்து முதல் ரஸ்தா வரை உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பல விபத்துகளும், உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-முத்துவளவன், நெல்லை.
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி
நெல்லை தருவையை அடுத்த பிராஞ்சேரி முதல் கல்லிடைக்குறிச்சி வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. இந்த பணி அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக புழுதி பறந்தபடி உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அதிகாரிகள் பிராஞ்சேரி முதல் கல்லிடைக்குறிச்சி வரையிலான சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, கூனியூர்.
திறந்து கிடக்கும் மின்பெட்டி
வள்ளியூர் சுந்தர பரிபூர்ண பெருமாள் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி திறந்த நிலையில் உள்ளது. குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே மின்பெட்டியை மூடி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டுகிறேன்.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
இரவு நேரத்தில் பஸ் வருமா?
நாகர்கோவிலில் இருந்து தஞ்சை, திருச்சி, கோவை, தி்ண்டுக்கல், ராமேசுவரம் செல்லும் நெடுந்தூர பஸ்கள் ஏர்வாடி வழியாக திரும்ப வருவதில்லை. நாங்குநேரி பைபாஸ் வழியாக நாகர்கோவிலுக்கு சென்று விடுகின்றன. இதனால் அந்த பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே இரவு நேரத்தில் அந்த பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சலாகுதீன், ஏர்வாடி.
பயன்படாத குடிநீர் தொட்டி
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பெருமாள்நகர் வடக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனை சரிசெய்யாமல் அப்படியே போட்டு விட்டனர். தற்போது குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து மின்மோட்டார் பழுதை நீக்கி பயன்படாத குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-மணிகண்டன், கடம்பன்குளம்.
சாலையில் பள்ளம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்துக்கு அருகில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் சாலையில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுத்து சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-செந்தில், வெங்கடேஸ்வரபுரம்.
பஸ் வசதி தேவை
திருவேங்கடத்தில் இருந்து தென்காசிக்கு நேரடி பஸ் வசதி இல்லை. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தென்காசிக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்ப இரவு நீண்டநேரம் ஆகி விடுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே திருவேங்கடத்தில் இருந்து தென்காசிக்கு பஸ்கள் இயக்க வேண்டும்.
-ஆனந்தராஜ், குளக்கட்டாக்குறிச்சி.
ரோட்டை சீரமைக்க வேண்டும்
சிவநாடானூர்-திரவியநகர் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக திரவியநகர் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-செல்வராமச்சந்திரன், சிவநாடானூர்.
மேல்பகுதி இல்லாத அடிபம்பு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி சந்தையடியூர் நாராயணசாமி கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள அடிம்பின் மேல்பகுதி எதுவும் இல்லாமல் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே அந்த அடிபம்ைப சீரமைத்து தர வேண்டும்.
-கண்மணி, உடன்குடி.
பள்ளிக்கு சாலை வசதி அமையுமா?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பகுதியில் ரோடு வசதி இ்ல்லாததால் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி உள்ளது. சீருடை அணிந்து செல்லும் மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
பழுதடைந்த மின்கம்பங்கள்
குலசேகரன்பட்டினம் ஊராட்சி 2-வது வார்டில் பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் பெரும்பாலான மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன. அவற்றை சீரமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்.
-இயேசுவடியான், குலசை.