சேலம்
தினத்தந்தி புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உடனடி நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தண்டரை கிராமத்தின் அருகே சனத்குமார் ஆற்றின் பாலத்தின் ஓரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்ட கூடாது என்று கூறியதுடன், இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதற்காக அதிகாரிகளுக்கும், நடவடிக்கை எடுக்க உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ராஜன், தண்டரை, கிருஷ்ணகிரி.
அடிக்கடி பழுதாகும் டவுன் பஸ்கள்
தர்மபுரியில் அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாகி சாலைகளில் நிற்கும் நிலை தொடர்ந்து வருகிறது. தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து திப்பம்பட்டி செல்லும் டவுன் பஸ் நேற்று மாலை புறப்படும் நேரத்தில் பழுதாகி நின்றது. டிரைவர் பலமுறை முயற்சி செய்தும் பஸ் என்ஜின் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனையடுத்து பஸ் பயணிகள் அந்த டவுன் பஸ்சை சிறிது தூரம் தள்ளிச் சென்றனர். அதன்பிறகு என்ஜின் ஸ்டார்ட் ஆனதை தொடர்ந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இதுபோன்று அடிக்கடி பழுதாகும் டவுன் பஸ்களை இயக்காமல் முறையாக பராமரித்து பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, காந்தி நகர், தர்மபுரி.
மதுக்கடை அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். பஸ் நிலையம் எதிர்புறம் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு வரும் பலர் மதுபோதையில் பஸ் நிலையம் பகுதியில் தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் போதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பஸ் நிலையம் எதிரில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
-அஸ்கர் அலி, கிருஷ்ணகிரி.
வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூர் மெயின் ரோடு காமலாபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே குழி தோண்டி அதை சரியாக மூடாமல் அப்படியே போடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க வேண்டும்.
-பாலா, காமலாபுரம், சேலம்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அந்த தெருநாய்கள் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. மேலும் இரவு நேரங்களில் தெருநாய்கள் சண்டைபோடுவதால் தூங்ககூட முடியவில்லை. தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.
புதர் மண்டி கிடக்கும் பூங்கா
சேலம் அம்மாபேட்டை 34-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அய்யாசாமி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. இதனால் பூங்காவில் நடைபயிற்சி செல்பவர்கள் அச்சத்துடனே செல்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-ரத்தினம் விஸ்வா, சேலம்.
திறக்கப்படாத குடிநீர் தொட்டி
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அப்படியே உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி கட்டி முடிக்கப்பட்டுள்ள பஸ் நிலைய குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சி.துரை, மேச்சேரி, சேலம்.
சேறும், சகதியுமான சாலை
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த காந்திநகர் உலகரைமேடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீதிகளில் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் சாலை சோதமடைந்து மண் சாலைகளாக மாறி நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் குண்டும், குழியுமாகவும், மழை நீர் தேங்கி நிற்பதால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. சாக்கடை கால்வாய் மற்றும் புதிதாக கான்கிரீட் சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், பனமரத்துப்பட்டி, சேலம்.
பொதுகுளியல் அறை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள பொது கிணற்றில் செய்து வருகிறார்கள். அங்கு ஆண், பெண் குளிப்பதற்கு வசதி இல்லை. இதனால் அவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அங்கு பொதுமக்கள் குளிப்பதற்கு குளியல் அறைகள் கட்டி தந்தால் பெரும் உதவியாக இருக்கும்.
-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.