< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 Jun 2022 5:28 PM IST

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வேகத்தடை அமைக்கப்படுமா?

நெல்லை மாவட்டம் முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் சிங்கம்பாறை விலக்கில் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

சாந்தி, முக்கூடல்.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் மேலகரம் ஓம்சக்தி கோவில் அருகே மின்கம்பியில் மரக்கிளை விழுந்து கிடக்கிறது என்று மேலகரத்ைத சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 6-ந் தேதி செய்தியாக வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், குற்றாலநாத சுவாமி கோவில் அதிகாரிகள் மரக்கிளைகளை வெட்டி அகற்றி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கடங்கநேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரபுரம் 6-வது வார்டு ஊர் கிணறு அருகில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. கட்டி முடிந்து சுமார் 4 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் குடிநீர் தொட்டி காட்சிப்பொருளாக காணப்படுகிறது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மகாராஜா, வெங்கடேஸ்வரபுரம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

கடையம் பகுதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவர், கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து கலையரங்கம் அருகே உள்ள கழிப்பறை சரியான பராமரிப்பு இல்லாததால் எப்போதும் துர்நாற்றம் வீசுவதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பறை சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

தெருவின் நடுவில் மின்கம்பம்

புளியங்குடி அரசு மருத்துவமனை கீழ்ப்புறம் உள்ள விநாயகர் கோவில் தெற்கு 7-வது தெருவின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்ேடாக்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அந்த மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

எட்வின் செல்வராஜ், புளியங்குடி.

வேகத்தடை வேண்டும்

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து சண்முகாபுரம் செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த சாலையின் அருகில் பள்ளிக்கூடமும் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். ஆகவே அங்கு வேகத்தடை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கணேசன், கீழக்கலங்கல்.

வழிகாட்டி பலகையை சூழ்ந்த மரக்கிளைகள்

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தம் அருகில் (முக்கூடல் வழியாக) நெல்லைக்கு சாலை பிரிந்து செல்கிறது. அங்குள்ள விலக்கு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களாக சாலையோர மரக்கிளைகள் அதிக அளவில் வளர்ந்து அந்த வழிகாட்டி பலகையை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி வழிகாட்டி பலகையை சூழ்ந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

மூடிக்கிடக்கும் கழிப்பறை

தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலை வாகைகுளம் சுங்கச்சாவடியில் கழிப்பறை உள்ளது. ஆனால் அந்த கழிப்பறை கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி கழிப்பறையை திறக்க ேவண்டும்.

பாலசுப்பிரமணியன், கோரம்பள்ளம்.

மேலும் செய்திகள்