< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
சேலம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 May 2022 1:29 AM IST

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சொந்த கட்டிடம் தேவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு ெபாதுமக்களின் கோரிக்கையை ஏற்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அன்று முதல் இன்று வரை தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் 17 தீயணைப்பு படையினர் பணிபுரிந்து வருகின்றனர். 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் கழிப்பிட வசதி உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லை. இதன் காரணமாக தீயணைப்புத் துறையினர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், பாப்பிரெட்டிப்பட்டி.

சுகாதார சீர்கேடு

சேலம் இரும்பாலை அருகே தளவாய்பட்டி ஊராட்சியில் உயர்நிலைப்பள்ளி அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது பள்ளி மாணவர்களுக்கும், அந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கிறது. இந்த கழிவுகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகே தளவாய்ப்பட்டி ஏரியின் வாய்க்கால் செல்கிறது. இதனால் வாய்க்காலில் நீர் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் பன்றிகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

-சிவராமன்,தளவாய்ப்பட்டி, சேலம்.

தெரு நாய்கள் தொல்லை

சேலம் சாமிநாதபுரம் மற்றும் அங்கம்மாள் காலனி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டும்.

-ஆர்.எம்.வீரப்பன். சாமிநாதபுரம். சேலம்.

குடிநீர் வசதி

சேலம் மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட கென்னடி நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. சாக்கடை கால்வாய் அமைக்கும் போது இந்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை உடனடியாக அமைக்க வேண்டும்.

- தினேஷ்,கென்னடி நகர், சேலம்.

பராமரிப்பு இல்லாத பூங்கா நடைபாதை

சேலம் திருவாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த பகுதியில் பூங்காக்களை சரிவர பராமரிப்பு இல்லாததால் செடிகள் காய்ந்து உள்ளது, மேலும் இந்த இடத்தில் பராமரிப்பு இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் சுத்தம் இல்லாமல் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும்.

- சுரேஷ், திருவாகவுண்டனூர், சேலம்.

பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையம் வழியாக சேலம், தர்மபுரி, அரூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் செல்கின்றன. இந்த பஸ்நிலையத்தை சிறுசிறு கடைகள், தள்ளுவண்டி கடைகள், பூக்கடைகள் என ஏராளமான கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதன் காரணமாக பஸ்நிலையத்திற்குள் ஒரு சில பஸ்கள் வருவதில்லை. மேலும் இங்கு வரும் பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணா, பாப்பிரெட்டிப்பட்டி.

பயனற்று கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிடி ஊராட்சியில் சந்தையூர், கோட்டமேடு, செம்பியானூர் உள்ளிட்ட சில கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு தேவையான மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களை இந்த பகுதியில் பெறுவதற்கு கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் தேவைக்காக கட்டப்பட்ட இந்த கட்டிடம் 5 ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான வருமானம், இருப்பிடம், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-சிவன், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்