< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
சேலம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 May 2022 1:29 AM IST

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும் குழியுமான சாலை

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சுவேத நதி பாலம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலத்தில் உள்ள தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி வீரகனூர் சுவேத நதி பாலத்தில் உள்ள தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குழந்ைதவேல், வீரகனூர், சேலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒப்பந்தவாடி செல்லும் சாலையில் சின்ன பர்கூர் அருகே மழையால் சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனால் சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரதி, பர்கூர், கிருஷ்ணகிரி.

சாய்ந்து கிடக்கும் வேலி

தர்மபுரி வள்ளலார் திடலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரசாமிப்பேட்டை செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இதனை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் இந்த வேலி சாய்ந்து விட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வேலியை உடனே சீரமைக்க வேண்டும்.

-குருநாதன், காந்தி நகர், தர்மபுரி.

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரை அடுத்த வண்டிகாரன்காடு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொதுகழிப்பிடம் உள்ளது. அந்த கழிப்பிடத்தின் அருகே செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. இரவு நேரத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.

-கோபி, பிள்ளாநல்லூர், நாமக்கல்.

சீரமைக்க வேண்டிய வேகத்தடை

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த சந்தைப்பேட்டை முதல் கொங்கரபட்டி செல்லும் சாலையில் வேகத்தடை உள்ளது. அந்த வேகத்தடையானது மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேகத்தடையை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

-சிவக்குமார், பொம்மியம்பட்டி, சேலம்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

சேலம் அம்மாபாளையம் ராஜகாளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-ராஜா, அம்மாபாளையம், சேலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்திற்கு எதிரில் சாக்கடை கால்வாய் உள்ளது. அந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-ஊர்மக்கள், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

சேலம் மாநகரம் குமாரசாமிப்பட்டி கிழக்கு தெருவில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிழக்கு தெரு பொதுமக்கள், குமாரசாமிப்பட்டி, சேலம்.

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

ஓமலூர் அருகே கோட்டை மாரியம்மன் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் பெருமாள் கோவில் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மூங்கிலேரி கால்வாயில் கலக்கிறது. அந்த கால்வாய் நீரானது சரபங்கா ஏரியில் கலந்து ஏரி நீர் மாசுபடுகிறது. கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசு அடைவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், ஓமலூர்.

மேலும் செய்திகள்