தென்காசி
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான ரேஷன் கடை கட்டிடம்
நெல்லை மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் காங்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-காஜா மைதீன் பாதுஷா, மேலப்பாளையம்.
ஏ.டி.எம். மையம் வேண்டும்
நெல்லையை அடுத்த பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி அருகில் அப்துல் லத்தீப் நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், காந்திமதி நகர், நவநகர், ஷாதுலி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏ.டி.எம். வசதி இல்லாததால், அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-ரகுமத்துல்லா, பேட்டை.
தெருநாய் தொல்லை
ஏர்வாடி பேரூராட்சி பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும், நடந்து செல்கிறவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-காஜா நஜிமுதீன், ஏர்வாடி.
* பாளையங்கோட்டை ஜாமிஆ பள்ளிவாசல் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-செய்யது முகம்மது, நெல்லை.
ஒளிராத போக்குவரத்து சிக்னல் விளக்கு
திசையன்விளை காமராஜர் சிலை அருகில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எரியவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து சிக்னல் விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
வாறுகால் தூர்வாரப்படுமா?
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை யாதவர் தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-சண்முக நாராயணன், புதுக்கோட்டை.
பஸ்நிலையத்தில் இருக்கை வசதி அவசியம்
கோவில்பட்டி பழைய பஸ்நிலைய வளாகத்தில் போதிய இருக்கை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் தரையில் அமர்ந்தவாறு பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே அங்கு போதிய இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.
காட்சிப்பொருளான சோலார் மின்விளக்கு
நாசரேத் அருகே வெள்ளமடம் பஞ்சாயத்து நொச்சிகுளம் கிராமத்தில் சாலையோரம் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் மின்விளக்குகள் ஒளிராமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே சோலார் மின்விளக்குகள் இரவில் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-மணிராஜ், நொச்சிகுளம்.
சேதமடைந்த சாலை
விளாத்திகுளம் அருகே கே.குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து அ.வேலாயுதபுரத்தில் இருந்து கீழ ஈரால் விலக்கு 4 வழிச்சாலை வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சாலையின் நடுவில் உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ் சரவணா, கே.குமரெட்டியாபுரம்.
சுகாதாரக்கேடு
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் சத்திரம் கீழ ரத வீதியில் தேர் நிறுத்தும் இடத்தின் அருகில் சிலர் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி சுத்தமாக வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி.
வாறுகால் பாலம் சரிசெய்யப்படுமா?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா இடைகாலில் இருந்து காசிதர்மம் செல்லும் சாலையோரம் புதிய வாறுகால் அமைக்கப்பட்டது. அப்போது அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வாறுகால் மீது பாலம் முழுமையாக அமைக்காததால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே வாறுகால் பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகநாதன், இடைகால்.
தெருவிளக்கு எரியவில்லை
பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி வி.ஏ.நகர் தெற்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு சரிவர எரிவதில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- ராமகிருஷ்ணன், பாவூர்சத்திரம்.
ஏ.டி.எம். மையம் வசதி
ஆலங்குளம் அருகே ராம்நகர், குத்தபாஞ்சான், காளத்திமடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏ.டி.எம். வசதி இல்லாததால், பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே ராம்நகரில் வங்கி ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு வேண்டும்.
- உச்சிமாகாளி, ராம்நகர்.
ஆபத்தான மின்கம்பம்
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி கீழ தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- நவநீதகிருஷ்ணன், பெத்தநாடார்பட்டி.
வாறுகால் வசதி வேண்டும்
ஆலங்குளம் அருகே வடக்கு காவாலாகுறிச்சி பஞ்சாயத்து கே.நவநீதகிருஷ்ணபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவில் புதிதாக சாலையை உயர்த்தி அமைத்துள்ளனர். இதனால் மழைநீர் வீடுகளுக்குள் செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரிகிருஷ்ணன், கே.நவநீதகிருஷ்ணபுரம்.