< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 Oct 2023 1:25 AM IST

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176128888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து கடம்பன்குளம் வழியாக கூந்தங்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாக தேவேந்திர சுதாகர் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சாலையின் நடுவில் ராட்சத பள்ளம்

நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் எஸ்.என்.ஹை ரோட்டில் சென்டிரல் தியேட்டர் அருகில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. அதில் மழைநீர் தேங்குவதால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

- முத்தையா நம்பிராஜன், நெல்லை.

சுகாதாரக்கேடு

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை நியூ காலனி பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகால் நிரம்பி கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலில் கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-கனகமணி, தச்சநல்லூர்.

* அம்பை தாலுகா மன்னார்கோவில் பஞ்சாயத்து காமாட்சி அம்மன் கோவில் தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-ராம்குமார், மன்னார்கோவில்.

ஆபத்தான தரைமட்ட கிணறு

பாளையங்கோட்ைட வி.எம்.சத்திரம் ஸ்ரீவள்ளிநகர் 2-வது தெருவில் பயன்பாடற்ற தரைமட்ட கிணறு உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள் மற்றும் கால்நடைகள், கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான தரைமட்ட கிணற்றை மூடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-குருசாமி, வி.எம்.சத்திரம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி;

குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு தமிழ் பாப்திஸ்து ஆலயம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகுவதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான மின்மாற்றி

சாத்தான்குளத்தை அடுத்த வடக்கு அமுதுண்ணாக்குடியில் சாலையோரம் உள்ள மின்மாற்றியில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்மாற்றியை அகற்றி விட்டு, புதிய மின்மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ஸ்டான்லி, சாத்தான்குளம்.

பாலத்துக்கு தடுப்புச்சுவர் அவசியம்

திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் அருகில் மெயின் ரோட்டில் உள்ள ஆவுடையார்குளம் மறுகால் வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள், வாகனங்கள், தரைமட்ட வாய்க்கால் பாலத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுகிறேன்.

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகம் சேதமடைந்து, தண்ணீர் வசதியின்றி பயன்பாடற்று பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை புதுப்பித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-முருகன், கோவில்பட்டி.

குப்பைகள் அகற்றப்படுமா?

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம், சிவசக்தி விநாயகர் கோவில் அருகில் குப்பைக்கூளமாக உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-தங்கபாண்டி, கோவில்பட்டி.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர்- கடையம் மெயின் ரோட்டில் மருதனியூரில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

- ஸ்டாலின், ஆவுடையானூர்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-மாடசாமி, வெள்ளானைக்கோட்டை.

போக்குவரத்துக்கு இடையூறு

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து சாலடியூரில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாலையில் இருந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பியை மாற்றி அமைக்காமல், அதைச் சுற்றிலும் சாலை அமைத்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மின்கம்பத்தின் தாங்கு கம்பியை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-லெனின், சாலடியூர்.

ஒளிராத தெருவிளக்கு

கடையம் அருகே பாப்பான்குளத்தை அடுத்த இடைகால் நெசவாளர் காலனியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு பழுடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-சக்தி, இடைகால்.

குண்டும் குழியுமான சாலை

திருவேங்கடம் அருகே உமையதலைவன்பட்டியில் இருந்து வெள்ளாகுளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-கவின்செல்வா, திருவேங்கடம்.

மேலும் செய்திகள்