தென்காசி
தினத்தந்தி புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கால்வாய் தடுப்பு சுவர் சேதம்
நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து பாளையங்கோட்டூர் வரையிலும் பாளையங்கால்வாயில் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் வாய்க்காலுக்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த வாய்க்கால் தடுப்பு சுவரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-சரவணன், பாளையங்கோட்டை.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
சேரன்மாதேவி மெயின் ரோட்டில் தம்பிதோப்பு அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்துக்கு எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதேபோன்று சிங்கம்பத்து கோவில் அருகிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-பாபு அருள் ஜோஷி, சேரன்மாதேவி.
தெருநாய்கள் தொல்லை
பணகுடி மெயின் ரோட்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மைக்கேல், பணகுடி,
சுகாதாரக்கேடு
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை அருகில் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு வாறுகாலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் வழிந்தோடச் செய்யவும், வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-குருசாமி, வி.எம்.சத்திரம்.
சாலையோரம் ஆபத்தான பள்ளம்
நெல்லை குறுக்குத்துறையில் இருந்து டவுன் ரெயில்வே கேட்டுக்கு செல்லும் வழியில் சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூடி, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-காஜா, நெல்லை.
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து காயாமொழி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (வழித்தட எண்:- 62 பி) பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், பிரேக் பிடிக்கும்போது அதிக சத்தம் எழுவதாகவும் மோகனசுந்தரம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த பஸ் பழுதுநீக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குண்டும் குழியுமான சாலை
குலசேகரன்பட்டினம் 7-வது வார்டு தெருக்களில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- ரஹமத்துல்லா, குலசேகரன்பட்டினம்.
ஒளிராத தெருவிளக்கு
கோவில்பட்டி புதுகிராமம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் உள்ள மின்கம்பங்களில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-பாலமுருகன், கோவில்பட்டி.
பயணிகள் அலைக்கழிப்பு
கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கழுகுமலை வழியாக சங்கரன்கோவில், தென்காசி செல்லும் பெரும்பாலான பஸ்களில் கழுகுமலை பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். நீண்ட தூரத்துக்கு செல்லும் பயணிகளை மட்டுமே ஏற்றுகின்றனர். இதனால் கழுகுமலைக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்களில் அனைத்து பயணிகளையும் முறையாக ஏற்றி செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-அல்லிதுரை, சிதம்பராபுரம்.
மின்தடையால் அவதி
குலசேகரன்பட்டினத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவிலும் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் ெபரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சீராக மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-சம்சுதீன், குலசேகரன்பட்டினம்.
வாறுகால் வசதி வேண்டும்
கயத்தாறு அருகே சிவஞானபுரம் வாகைகுளம் பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் வீடுகளின் முன்பு கழிவுநீர், மழைநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-கனகவல்லி, வாகைகுளம்.
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி 3-வது வார்டு செல்லப்பட்டி பகுதியில் வாறுகால் அமைக்கப்படாததால், தெருக்களில் கழிவுநீர் தேங்குவதாக முத்துராஜ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வாறுகால் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான மின்கம்பம்
சுரண்டை அருகே அச்சங்குன்றம் சப்பாணி மாடசுவாமி கோவில் மேற்கு தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-சுதன், அச்சங்குன்றம்.
சேதமடைந்த நூலக கட்டிடம்
செங்கோட்டை தாலுகா இலத்தூரில் உள்ள நூலகம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. இதனால் நூலகத்துக்கு வாசகர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே நூலக கட்டிடத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- எஸ்ரா டேனியல், இலத்தூர்.
குண்டும் குழியுமான சாலை
கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்
-முகம்மது மீரான், முதலியார்பட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கடந்த சில நாட்களாக குறைந்த நேரமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கப்பெறாமல் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அங்கு போதிய அளவு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- கிறிஸ்டோபர், கருத்தபிள்ளையூர்.