கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய சுகாதார வளாகம் கட்டப்படுமா?
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது சுகாதார வளாகம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்துவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முத்தனூர்
சாலையின் குறுக்கே பள்ளம்
திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கணக்குப்பிள்ளைபுதூர் வழியாக அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் செல்லும் பிரிவு ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்வோர் அந்த இடத்தில் உள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், அரவக்குறிச்சி
புதிய மயான கொட்டகை வேண்டும்
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி, பெரியபனையூரில் உள்ள அம்பேத்கர் நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் தனியாக சிமெண்டு கூரையால் ஆன சிறிய மயான கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த மயான கொட்டகை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரியபனையூர்
பூட்டப்பட்ட ஆயத்த ஆடை கட்டிடம்
தவுட்டுப்பாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித்துறை சார்பில் ஆயத்த ஆடை தயாரிக்கும் கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கட்டிடத்தின் மேல்தள கான்கிரீட் சிதிலமடைந்து உள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து மழைநீர் கட்டிடத்திற்குள் கசிந்து வருகிறது. இதனால் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிலை நிறுத்தி விட்டதன் காரணமாக அந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் அரசு கட்டிடத்தை பூட்டி விட்டனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தவுட்டுப்பாளையம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கரூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தில் இருந்து வேட்டமங்கலம் செல்லும் தார் சாலை ஓரத்தில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த மின்கம்பிகள் மீது வாகனங்கள் உரசினால் பெரும் அளவில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குளத்துப்பாளையம்