< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
31 Aug 2023 12:43 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எலும்புக்கூடான மின்கம்பங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே உள்ள பாப்பாவயல் மற்றும் போரம் ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான மின்கம்பங்களில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கின்றன. இதனால் காற்றடிக்கும் நேரத்தில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பாப்பாவயல்

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முதல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனை செல்லும் நோயாளிகள் வரை அனைவரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இவ்வழியில் உள்ள செட்டிகுளம் தரைப்பாலத்தில் கூட பள்ளம் ஏற்பட்டு, இரவு நேரங்களில் பலரும் பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கொத்தமங்கலம்

பயனற்ற குடிநீர் தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கறம்பவிடுதி ஊராட்சி சொக்கம்பேட்டை கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் புதிதாக குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த குடிநீர் தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைக்காமல் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சொக்கம்பேட்டை

ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஒலியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காயாம்பட்டி

போக்குவரத்திற்கு இடையூறு

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம் போன்ற பகுதியில் இருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வாங்க இந்த மீமிசல் நகருக்கு தான் வர வேண்டும். இதனால் இப்பகுதியில் ஓரளவு கூட்டம் எப்போதுமே இருக்கும். இந்த நிலையில் இங்குள்ள கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து தங்களுடைய கடைப் பொருட்களை சாலையில் வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீமிசல்

மேலும் செய்திகள்