கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு நாய்கள் தொல்லை
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், வடசேரி கிராமம் காவல்காரன்பட்டி கடைவீதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் இப்பகுதியில் செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காவல்காரன்பட்டி
தள்ளுவண்டி கடைகளால் அவதி
கரூர் காந்கிராமம், அரசு மருத்துவக்கல்லூரி அருகில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தள்ளுவண்டி கடைகள் அதிகம் உள்ளன. இதனால் அங்கு நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் தங்ளது இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்ஙகு இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். அங்குள்ள தள்ளுவண்டி கடை முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் தடுக்கின்றனர். மற்றும் அவசர ஆம்புலன்ஸ் செல்லமுடியாத அளவில் ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.
பஸ் நிறுத்தம் வேண்டும்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பாரதி நகரில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வேலைக்காக கரூர் அருகில் உள்ள ஜவுளி பூங்காவிற்கும், கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். பாரதி நகரில் இதுவரை பஸ் நிறுத்தம் கிடையாது. மாலை வேலை முடிந்து செல்பவர்கள் மலைக்கோவிலூரில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாரதி நகருக்கு நடந்தே தான் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பாரதி நகரில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பார்த்திபன்,பொதுமக்கள்.
அதிக கற்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து
கரூர் மாவட்டம் பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கற்கள் அனுப்பப்பட்டு வருகிறது.இந் நிலையில் லாரியில் அதிக அளவு பெரிய கற்களை பாடி மட்டத்திற்கு மேல் ஏற்றி செல்லும் போது லாரிகள் அதிவேகத்தில் செல்லும்போது லாரியின் பாடி மட்டத்திற்கு மேல் உள்ள கற்கள் தார் சாலையில் விழுந்து செல்கின்றன .லாரிக்கு பின்னால் வரும் வாகனங்களின் மீது கற்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புன்னம் சத்திரம்.
போக்குவரத்து நெரிசல்
கரூர் நகரின் மைய பகுதியான ஜவகர்பஜாரில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், தலைமை தபால் அலுவலகம், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு பொருட்களை பொதுமக்கள் வாங்க இப்பகுதிக்கு வருகின்றனர். பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள், வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் ஜவகர்பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கரூர் ஜவகர்பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்களை சாலையின் ஓரத்தில் முறைப்படி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்