திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அறிவுசார் மையம் அருகே அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் விடுதி, ரேஷன் கடையும் உள்ளது. இந்தநிலையில் இப்பகுதியில் வீடுகளில் சேரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் மாணவர் விடுதி முன்பு மலைப்போல கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக நடந்தது செல்லும் பொதுமக்கள், மாணவர்கள், ரேஷன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனடியாக இங்கிருந்து அள்ளவும், இங்கு மீண்டும் குப்பைகளை கொட்டினால் மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.
குடிநீர் வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், சா.அய்யம்பாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் .இங்கு முருகன் கோவில் முதல் தெற்கியூர் விரை கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்ய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரமேஷ், அய்யம்பாளையம்.
மூடப்படாத கழிவுநீர் தொட்டிகள்
திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு தென்னூர் வெள்ளாளர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் தொட்டிகள் புதிதாக கடந்த 7 நாட்களுக்கு அமைக்கப்பட்டது. இந்த தொட்டிகள் இன்று வரை முறையாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் கழிவுநீர் தொட்டிகளில் நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் தொட்டிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தென்னூர்.