தேனி
மயிலாடும்பாறையில் இருந்து தினமும் அரசு கலை கல்லூரிக்கு பஸ் இயக்க கோரிக்கை
|மயிலாடும்பாறையில் இருந்து தினமும் அரசு கலை கல்லூரிக்கு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி அருகே வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் மாணவிகளின் வசதிக்காக தினந்தோறும் காலை 8.10 மணிக்கு மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டி வழியாக தேனிக்கும், மாலை 3 மணிக்கு தேனியில் இருந்து வீரபாண்டி வழியாக மயிலாடும்பாறைக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் வேறு எந்த அரசு பஸ்களும் இயக்கப்படுவதில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாரத்தில் 3 நாட்கள் வீரபாண்டி வழியாக செல்லும் அரசு பஸ் நிறுத்தப்படுகிறது. அந்த நாட்களில் கல்லூரி மாணவிகள் வேறு பஸ்சில் தேனி, அங்கிருந்து மற்றொரு பேருந்தில் வீரபாண்டிக்கு சென்று அதன் பின்பு ஒரு கிலோமீட்டர் தூரம் கல்லூரிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாணவிகளின் நலன் கருதி மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டி வழியாக தினந்தோறும் தடையில்லாமல் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.