< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் சோகம்சமையல் கியாஸ் கசிந்து பெண் உள்பட 2 பேர் சாவுசிலிண்டர் நிறுவன ஊழியர் படுகாயம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:30 AM IST

நாமக்கல்லில் சமையல் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.

நாமக்கல்லில் சமையல் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். பணியாளர்

நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால்சாமி. இவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். பணியாளர் நாராயணன் (வயது 68), அவரது மனைவி தனலட்சுமியுடன் (62) வசித்து வந்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு உதவியாளராக நாராயணன் வேலை செய்து வருகிறார். வீட்டின் மற்றொரு பகுதியில் பார்த்தசாரதி (72), லதா தம்பதியினர் வசித்து வந்தனர்.

நாராயணன் கடந்த மாதம் 15-ந் தேதி தான் கோபால்சாமி வீட்டில் வாடகைக்கு குடிவந்தார். எனவே தற்காலிக பயன்பாட்டுக்காக கோபால்சாமி, நாராயணனுக்கு சமையல் கியாஸ் சிலிண்டரை வழங்கினார். இதனை தனலட்சுமி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அடுப்பை ஆப் செய்தாலும் கியாஸ் கசிந்து அடுப்பில் தொடர்ச்சியாக தீ எரிந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனலட்சுமி சிலிண்டரை சரிவர பயன்படுத்தாமல் இருந்து வந்தார்.

கியாஸ் கசிவு

இந்த நிலையில் நேற்று பார்த்தசாரதி குடியிருக்கும் வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டது. இதையடுத்து புதிய சிலிண்டருடன் தனியார் கியாஸ் சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் (25) வந்தார். அதை வீட்டில் விளக்கு ஏற்றி கொண்டிருந்த தனலட்சுமி பார்த்தார். இதையடுத்து பார்த்தசாரதி வீட்டில் சிலிண்டரை மாற்றிவிட்டு வெளியே வந்த அருண்குமாரிடம், தங்கள் வீட்டில் உள்ள சிலிண்டரில் கியாஸ் கசிவு இருப்பதாக கூறி பரிசோதித்து பார்க்க அவரை, தனலட்சுமி அழைத்தார்.

இதனைத்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அருண்குமார் கியாஸ் சிலிண்டரில் இருந்த `ரெகுலேட்டரை' கழற்றிவிட்டு கத்திரிக்கோல் மூலம் சிலிண்டரின் வால்வில் குத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சிலிண்டரின் வால்வில் இருந்து அதிகளவில் கியாஸ் வெளியேறி வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் தனலட்சுமி மற்றும் அருண்குமார் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்து சத்தம் போட்டனர். மேலும் பார்த்தசாரதி தீயினால் ஏற்பட்ட புகையால் மயக்கம் அடைந்தார். வாசலில் நின்று கொண்டு இருந்த லதா வெளியே ஓடி வந்துவிட்டார்.

2 பேர் சாவு

தீ விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த பார்த்தசாரதி மற்றும் தனலட்சுமி ஆகியோரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அருண்குமார் படுகாயங்களுடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்து தொடர்பாக நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமையிலான போலீசாரும், நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சோகம்

அதன்படி, முதற்கட்ட விசாரணையில் சிறிய வீட்டுக்குள் இருக்கும் குறுகலான அறையில் வைத்து கியாஸ் சிலிண்டரை ஊழியர் பரிசோதித்ததே தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்