< Back
மாநில செய்திகள்
களக்காட்டில் சூறாவளி காற்றுடன் மழை - கார் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மாநில செய்திகள்

களக்காட்டில் சூறாவளி காற்றுடன் மழை - கார் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
5 Aug 2022 7:42 PM IST

களக்காட்டில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த நிலையில் கார் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று தலையணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிவப்புரத்திற்கு கார்களில் சென்று நீரோடையில் குளித்து கொண்டிருந்தனர். மாலையில் திடீர் என சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டரசு மரம் சாய்ந்து விழுந்தது.

அதன் கிளைகள் சாலையை அடைத்தபடி விழுந்தன. மரம் விழும் சத்தத்தை கேட்டு மரத்தின் கீழ் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடி உயிர்பிழைத்தனர்.

மரம் விழுந்ததில் களக்காடு வியாசராஜபுரத்தை சேர்ந்த அப்பாஸ் கார் சேதமடைந்தது. மேலும் மரக்கிளைகள் சாலையை அடைத்தபடி கிடந்ததால் சுற்றுலா பயணிகள் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் உள்ளூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 30-க்கும் மேற்பட்டோர் திரும்பி வர முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார், நாங்குநேரி தீயணைப்பு நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் வீரர்கள் அங்கு சென்றனர். உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் மரத்தில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு பின் மரக்கிளைகள் அகற்றப்பட்டு சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்