சென்னைக்கு மிக அருகே 'மிக்ஜம்' தீவிர புயலாக வலுப்பெற்றது...! - புரட்டி எடுக்கும் கனமழை...!
|மிக்ஜம் புயல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
சென்னை,
வங்க கடல் பகுதியில் கடந்த 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருந்தது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்தது.
மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று காலை சென்னையில் இருந்து 130 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்தது. பின்னர், மிக்ஜம் புயல் மெல்ல நகர்ந்து சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில், மிக்ஜம் புயல் மெல்ல நகர்ந்து சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மிக்ஜம் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
தற்போது, சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜம் தீவிர புயலாக நிலைகொண்டுள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக கடலோர பகுதியில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 8 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் மிக்ஜம் புயல் நகர்ந்து வருகிறது. மிக்ஜம் புயல் கடந்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
மிக்ஜம் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை முற்பகல் நெல்லூர் - முசூலிப்பட்டினம் புயல் கரையை கடக்க உள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை நீடித்து வருகிறது. கனமழை இன்று மாலை வரை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.