மாண்டஸ் புயல் தாக்குதல் எதிரொலி: 121 பாதுகாப்பு மையங்கள், 5,093 நிவாரண முகாம்கள் தயார்
|மாண்டஸ் புயல் தாக்குதல் எதிரொலியாக, தமிழகத்தில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாண்டஸ் புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக 58 லட்சத்து 47 ஆயிரம் நபர்களின் செல்பேசிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் டி.என்.ஸ்மார்ட் செயலி மூலமாகவும், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 512 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 459 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்புக்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் 169 நிவாரண மையங்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கு என நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார்நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.
ஆவணங்களை பாதுகாக்க வேண்டும்
கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும்போது அதை பொதுமக்கள் ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும்.
கியாஸ் சிலிண்டரை அணைத்துவைக்க வேண்டும்
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல், டுவிட்டர், டி.என்.ஸ்மார்ட் செயலி மூலம் பகிரப்படும் அதிகாரபூர்வமான அறிவுரைகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்றுவதோடு, வதந்திகளை நம்பக்கூடாது. அதிகாரபூர்வ தகவல்களுக்காக வானொலி, தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
கியாஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அணைத்துவைக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும்போது ஜன்னல், வாசல் கதவுகள் சரியான முறையில் மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
அவசர உதவி பெட்டகம்
வீட்டின் மின் இணைப்பு மற்றும் சுவிட்சுகள் அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தவறாமல் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
மெழுகுவர்த்தி, கை மின்விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள், மருத்துவ கட்டு, உலர்ந்த உணவுவகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளூக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.