மாண்டஸ் புயலால் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரூ.3.5 கோடி அளவிற்கு சேதம்
|41 மெட்ரோ நிலையங்களில் 4 குழுக்கள் சென்று தற்காலிக சேத மதிப்பை ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மாண்டஸ் புயலால் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.3.5 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை, கிண்டி ஆகிய மெட்ரோ நிலையங்களில் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன.
அண்ணாநகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய மெட்ரோ ரெயில் நிலைங்களில் வழிகாட்டு பலகைகளும், இதர பொருட்களும் சேதமடைந்துள்ளன. கோயம்பேடு பணிமனை, திருமங்கலம் மெட்ரோ நிலையங்களின் வாகன நிறுத்தங்களில் குழாய்கள் உடைப்பு உள்ளிட்ட சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
41 மெட்ரோ நிலையங்களில் 4 குழுக்கள் சென்று தற்காலிக சேத மதிப்பை ஆய்வு செய்துள்ளதாகவும், 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.