தமிழகத்தில் புயல் பாதிப்பு; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
|அவசரகால செயல்பாட்டு மையத்தை '1077' என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. 'மிக்ஜம்' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும். இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவிக்கான எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புயல் பாதிப்பு குறித்து '1077' என்ற எண் மூலம் அவசரகால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை '1070' என்ற எண் மூலமாகவும், வாட்ஸ் ஆப் எண் - 9445869848 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். புயல் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.