வேலூர்
சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
|வேலூரில் நடந்த சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
வேலூர்
உலக மிதிவண்டி தினத்தையொட்டி திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் மக்கான் சிக்னல் அருகே நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அருகே தொடங்கி, கோட்டை சுற்றுச்சாலை, அண்ணா சாலை வழியாக சென்று கோட்டையில் நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமையோடு வாழ்வதற்கும், சுற்றுப்புற சூழல் மாசு அடைவதை தடுக்க சைக்கிள் உதவும் என்ற பதாகைகளை ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.