100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை குறைப்பது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் - கி.வீரமணி
|100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை குறைப்பது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் என கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியைக் குறைத்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கு ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2023-2024 நிதியாண்டிற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21.6 சதவீதம் குறைவாகும்.
100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின வகுப்பினர், அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத்தட்ட 85 முதல் 90 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். அதே போன்று, தேசிய அளவில், உருவாக்கப்பட்ட வேலை நாள்களில், சுமார் 57.19 சதவீதம் வேலைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன.
கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு அழித்துக் கொண்டிருக்கிறது. இது கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.