< Back
மாநில செய்திகள்
பேரம்பாக்கம் பாரிவேட்டை திருவிழாவில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளைக்கு வெட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பேரம்பாக்கம் பாரிவேட்டை திருவிழாவில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளைக்கு வெட்டு

தினத்தந்தி
|
19 Jan 2023 2:16 PM IST

பேரம்பாக்கத்தில் நடைபெற்ற பாரிவேட்டை திருவிழாவில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளைக்கு கத்தி வெட்டு. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் பேரம்பாக்கம், களாம்பாக்கம், சிவபுரம், மாரிமங்களம், நரசிங்கபுரம் போன்ற கிராமங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் ஒன்று கூடி முன்னும் பின்னும் அசைந்தாடி பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது.

இந்த நிலையில் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் (வயது 23) தலைப்பொங்கலுக்காக தன் மனைவியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு பாரிவேட்டை திருவிழாவுக்கு வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகிறது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக கூச்சலிட்டவாறு சென்று சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதை கண்ட மனோஜ் அவர்களை தட்டி கோட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மனோஜிடம் தகராறில் ஈடுப்பட்டு தாங்கள் வைத்திருந்த கத்தியால் மனோஜ் தலையில் வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மனோஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மப்பேடு போலீசார் புது மாப்பிள்ளையை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்