திருவள்ளூர்
மகளை கிண்டல் செய்த வாலிபருக்கு வெட்டு - பெயிண்டர் கைது
|திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். மகள்களின் பள்ளிப் படிப்பை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக திருத்தணி காந்தி ரோடு பகுதியில் குடும்பத்துடன் மணிகண்டன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 9-ம் வகுப்பு படிக்கும் மணிகண்டனின் மூத்த மகள் திருத்தணி காந்தி ரோடு பகுதி வழியாக பஜார் வீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி ரோடு 3-வது தெருவை சேர்ந்த பிரேம்குமார் (வயது 32) என்பவர் மதுபோதையில் மணிகண்டனின் மகளிடம் ஆபாசமாக பேசி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பிரேம்குமாரை பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக திருத்தணி போலீசார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரேம்குமார் மீது ஏற்கனவே திருத்தணி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.