< Back
மாநில செய்திகள்
வனப்பகுதியில் வௌிநாட்டு மரங்கள் வெட்டி அகற்றம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வனப்பகுதியில் வௌிநாட்டு மரங்கள் வெட்டி அகற்றம்

தினத்தந்தி
|
12 Oct 2023 4:45 AM IST

கொடைக்கானல் வனப்பகுதியில் வௌிநாட்டு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.

கொடைக்கானலில் உள்ள வனப்பகுதிகளில் ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய வெளிநாடுகளில் வளரும், யூகலிப்டஸ் எனப்படும் சீகை மரங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் நடப்பட்டது. தற்போது அவை பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. இந்த மரங்களின் அடியில் புற்கள் வளராது. எனவே வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.

இதனை தடுக்க வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, அந்த இடங்களில் சோலை மரங்களை நட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு மதுரை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள வெளிநாட்டு மரங்களை வெட்டி அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானல் வனச்சரகம், மன்னவனூர், பூம்பாறை, பேரிஜம் வனப்பகுதிகளில் உள்ள மரங்களான யூகலிப்டஸ் மரங்களை கொடைக்கானல் மாவட்ட வனஅலுவலர் யோகேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் வனச்சரகர்கள் சிவக்குமார், சுரேஷ்குமார் மற்றும் வனத்துறையினர் வெட்டி அகற்றினர். மேலும் அந்த இடங்களில் 25 ஆயிரம் தேக்கு, மலைநாவல், குமிழ் உள்பட பல்வேறு சோலை மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.

அதோடு மலைப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கும் 2 லட்சம் சோலை மரக்கன்றுகளை வனத்துறையினர் இலவசமாக வழங்கியுள்ளனர். இதன் மூலம் கொடைக்கானல் வனப்பகுதியில் தற்போது வரை 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மோயர் பாயிண்ட் பகுதியில் இருந்து பேரிஜம் செல்லும் சாலை வரை வெளிநாட்டு மரங்கள் அகற்றப்பட்டு அங்கு சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு புல் தரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்