< Back
மாநில செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. முற்றுகை போராட்டம்
சென்னை
மாநில செய்திகள்

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. முற்றுகை போராட்டம்

தினத்தந்தி
|
10 Sept 2023 2:25 PM IST

போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தே.மு.தி.க. முற்றுகை போராட்டம்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், போரூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரியும் தே.மு.தி.க. சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதற்காக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் போரூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பிய அவர்கள் திடீரென வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் போரூர் சுங்கச்சாவடி அருகே அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நிருபர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :-

சுங்கச்சாவடிகளை மூடவேண்டும்

நாம் வாகனங்கள் வாங்கும்போதே வரிகள் கட்டுகிறோம். எந்த சுங்கச்சாவடிகளிலும் சாலைகள், கழிவறை வசதிகள் சரியில்லை. சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உரிய ஊதியம், பாதுகாப்பு கிடையாது. தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும். தமிழகத்தில் 63 சுங்கச்சாவடிகளை வைத்து வசூல் செய்து வருகின்றனர். பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது இல்லை. கட்டணமில்லா சுங்கச்சாவடிகளாக உள்ளது. மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாடியநல்லூர்

அதேபோல் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள சுங்கச்சாவடியை திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.எம். டில்லி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்