< Back
மாநில செய்திகள்
தாய்மார்களின் சாபம் சும்மா விடாது: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது சிவிசண்முகம் எம்பி பேச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

தாய்மார்களின் சாபம் சும்மா விடாது: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது சிவிசண்முகம் எம்பி பேச்சு

தினத்தந்தி
|
21 July 2023 12:15 AM IST

தாய்மார்களின் சாபம் சும்மா விடாது என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்துத்துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-

பொய்யான வாக்குறுதி

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விடியலை தருவோம், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்துவிட்டனர். விலைவாசியை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்காமல் பொம்மை முதல்-அமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.

மத்திய அரசு, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறது என்கிறார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள். லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டீர்களே? நீங்கள் என்ன செய்தீர்களோ அதுதான் உங்களுக்கு திரும்பிவரும்.

72 வயதுடைய பொன்முடியை இரவெல்லாம் வைத்து விசாரிக்கலாமா? என்கிறீர்கள். இப்போதுள்ள அறிவு, புத்தி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்யும்போது எங்கே போய்விட்டது.

வரி உயர்வு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை கட்டுக்குள் வைப்போம், வரியை உயர்த்த மாட்டோம் என்றார்கள். ஆனால் விலைவாசி உயர்ந்துள்ளது, மின்கட்டணமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.ஆயிரம் மின் கட்டணம் கட்டியவர்கள் தற்போது ரூ.10 ஆயிரம் கட்டுகிறார்கள். வீட்டுவரி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. குப்பைக்கு கூட குப்பை வரி போட்டவர் ஸ்டாலின். பால் விலையை உயர்த்திவிட்டனர். ஆனால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பாதித்தால் அதை அப்படியே டாஸ்மாக்கில் கொடுக்க டாஸ்மாக் மதுபாட்டில்கள் விலையையும் உயர்த்திவிட்டனர்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் தற்போது விலைவாசி உயர்வு, வரி உயர்வு இவற்றின் மூலம் மக்களை வஞ்சித்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருமானத்தை தி.மு.க. அரசு பார்த்துள்ளது. இந்த பணம் எங்கே போயிற்று? உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காக திரும்பி என்ன செய்தீர்கள்?

தாய்மார்களின் சாபம்

மக்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை கொள்ளையடிப்பதால்தான் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு செல்கிறார்கள். மக்களின் சாபம், தாய்மார்களின் சாபம், வயிற்றெரிச்சல் சும்மா விடாது. ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமல்ல சிறைக்கும் அனுப்பும்.

விலைவாசியை குறைக்க முடியாத ஸ்டாலின், முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களை அரசே கொள்முதல் செய்து ஏழை மக்களுக்கு விற்பனை செய்ய ஸ்டாலின் ஏன் தயங்குகிறார், மறுக்கிறார். இந்த அரசுக்கு அதற்கு நேரமில்லை. இ.டி.க்கு பயந்தே நிர்வாகம் செய்கின்றனர். எப்படியாவது தங்கள் ஆட்சியை காப்பாற்றவும், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதே அவர்களது நோக்கம்.

நிழல் ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலோடு தி.மு.க. அரசுக்கு சாவுமணி அடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்