'பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போது காவிரி ஆறு இல்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை
|பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போதும் காவிரி ஆறு உள்ளது என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
மதுரை,
கடந்த 2019-ம் ஆண்டு அரவக்குறிச்சி காவிரி ஆற்று படுகையில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காவிரி ஆற்றில் மணல்கொள்ளை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'காவிரி ஆறு மோசமான நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போதும் காவிரி ஆறு இருப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை' என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ரூபாய் இழப்பீட்டை இதுவரை ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை 4 மாத காலத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.