தேனி
குமுளி மலைப்பாதையில் கொட்டப்படும்பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் உயிரிழக்கும் வனவிலங்குகள்
|குமுளி மலைப்பாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக எல்லையில் குமுளி அமைந்துள்ளது. இங்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ் நிலைய வசதிகள் இல்லாததால் சாலையோரங்களிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் பொதுமக்கள் சாலையோரங்களையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல், உணவு விடுதிகளில் இருந்து கழிவுப்பொருட்களை சிலர் இரவு நேரத்தில் லாரிகளில் கொண்டு வந்து இங்கு கொட்டி செல்கின்றனர்.
இதன்காரணமாக சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், அங்கு சுற்றித்திரியும் வனவிலங்குகளும் கழிவுப்பொருட்களில் உள்ள உணவுப்பொருட்களை தின்பதால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகள் கலந்த குப்பைக்கழிவுகளை தமிழக வனப்பகுதிக்குள் கொண்டுவந்து கொட்டுவதை தடுக்க மாவட்ட வனத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.