திருவாரூர்
சிறு தானியங்களை பயிரிடுவதால் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும்
|சிறு தானியங்களை பயிரிடுவதால் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும்
சிறுதானியங்களை பயிரிடுவதால் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும் என சட்டமன்ற பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன் பேசினார்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழுத்தலைவரும், கம்பம் எம்.எல்.ஏ.வுமான ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், செல்வராஜ் எம்.பி., குழு உறுப்பினர்கள் செல்வம் (மேலூர்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), நல்லதம்பி (கங்கவல்லி), எம்.எல்.ஏ.க்கள் கலைவாணன், மாரிமுத்து, ஏடுகள் குழு கூடுதல் செயலாளர் (பதிப்பாளர்) நாகராஜன், இணைச்செயலாளர் (பதிப்பாளர்) பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்ற பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டமானது விவசாய தொழிலை பிரதானமாக கொண்டுள்ளது. முக்கிய பயிராக நெற்பயிர் உள்ளது. விவசாயத்தினை இயற்கை முறையில் செய்து குறைந்த செலவில் அதிக லாபத்தை எடுக்க முடியும். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், தென்னை மரம், சிறு தானியங்களின் பயிர் வகைகளுக்கும் அரசு பிரத்யேக திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சிறு தானியங்களை பயிரிடுவதால் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும்.
ஆண்டறிக்கை
எரிசக்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு, இணையம், கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மேற்கண்ட பணிகளுக்கான ஆண்டறிக்கைகளை விரைவாக முடித்து சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் 2 பேருக்கு திருமண உதவித்தொகையும், 3 பேருக்கு கல்வி உதவித்தொகையும், 7 பேருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், 6 பேருக்கு இ யற்கை மரணத்திற்கான நிதி உதவி ஆணையினையும், ஒருவருக்கு விபத்து மரணத்திற்கான நிதி உதவி ஆணையினையும் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும் குழு தலைவர் வழங்கினார்.
முன்னதாக திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக நவீன நெல் அரவை மில் செயல்பாடு குறித்தும், திருவாரூர் அருகே சோழசக்கரநல்லூர் நுகர்பொருள் வாணிபக்கழக நிலையத்தின் கட்டுமான பணிகளின் தரம் குறித்தும், நன்னிலம் ஆண்டிப்பந்தல், மேலவாசல் கிராமத்தில் மீன் குட்டையில் மீன் வளர்ப்பு குறித்தும் குழு தலைவர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.