கோயம்புத்தூர்
சின்னவெங்காயம் சாகுபடி குறைந்தது
|சின்னவெங்காயம் சாகுபடி குறைந்தது
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் சின்ன வெங்காயம் சாகுபடி குறைந்தது.
சின்ன வெங்காயம்
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதி செழிப்பானது ஆகும். இங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் லேசான சாரல் இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக இந்த பகுதியில் அதிகளவில் விவசாயிகள் பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.
குறிப்பாக இங்குள்ள நரசீபுரம், செம்மேடு, இக்கரை போளுவாம்பட்டி, சாடிவயல், மத்வராயபுரம், பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பச்சாபாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
சாகுபடி குறைந்தது
ஆனால் இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் தொடங்கக்கூடிய தென்மேற்கு பருவமழை 1 மாதம் காலதாமதமாக தொடங்கியது. அத்துடன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யக்கூடிய விதை வெங்காயத்தின் விலையும் அதிகமாக இருந்தது.எனவே எப்போதுமே இல்லாத வகையில் இந்த ஆண்டு தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயத்தின் சாகுபடி மிகவும் குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-
மழை பொய்த்தது
தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருக்கும்.
இந்த சீதோஷ்ண நிலை சின்ன வெங்காய சாகுபடிக்கு ஏற்றது என்பதால் அதன் விளைச்சலும் அதிகமாக இருக்கும். விதை வெங்காயம் மூலம்தான் சாகுபடி செய்யப்படும். அதற்கு ஏக்கருக்கு 650 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஏக்கருக்கு சராசரியாக 5 டன்னுக்கும் அதிகமாக விளைச்சல் இருக்கும்.
நுனி கருகல் நோய்
ஆனால் இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில்தான் மழை பெய்ய தொடங்கியது. அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் பொய்த்து போனது. மேலும் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்த விதை வெங்காயம் ரூ.150-க்கு விற்பனையானது.
அத்துடன் மழையை எதிர்பார்த்து மே மாத இறுதியில் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தில் நுனி கருகல் நோயும் ஏற்பட்டுஉள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் சாகுபடி குறைந்துவிட்டது. 7 ஆயிரம் ஏக்கரில் கூட அதன் சாகுபடி செய்யப்படவில்லை.
அதிகாரிகள் நடவடிக்கை
எனவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது அரசு நடவடிக்கை எடுத்து மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை வெங்காயம் வழங்கி இருந்தால் அதன் சாகுபடி குறைந்து இருக்காது. தற்போது சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் அதை சாகுபடி செய்ய ஆர்வமாக இருந்தனர்.ஆனால் இதுபோன்ற சூழ்நிலை இருந்ததால் சாகுபடி செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் காலத்திலாவது இதுபோன்ற நிலை ஏற்பட்டால் விவசாயிகளிடம் கலந்து ஆலோசனை செய்து முன்கூட்டியே அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.