தஞ்சாவூர்
தஞ்சையில், குறுவை நடவு பணிகள் தொடக்கம்
|தஞ்சையில் குறுவை நடவு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் பெண் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் குறுவை நடவு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் பெண் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னதாக நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறந்்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 27-ந்தேதி வந்ததையடுத்து பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பிரித்துவிடப்பட்டது.
பாலப்பணிகள் நடந்து வந்ததால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இந்த நிலையில் கல்லணை கால்வாயில் கடந்த 5-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையொட்டி தஞ்சையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட தொடங்கினர்.
இயல்புநிலை
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து துறை பணிகளும் முடங்கின. அதில் விவசாய பணியும் உள்ளடங்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமலில் இருந்த கட்டுப்பாடுகளால் விவசாய பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி வேலைக்கு வந்த விவசாய தொழிலாளர்களும் முககவசம் அணிவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டி இருந்தது. இதனால் பெண் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. தற்போது கொரோனா பரவல் குறைந்து, கட்டுப்பாடுகள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பெண் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வயலில் இறங்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நடவுப்பணி
தற்போது தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் முதற்கட்ட விவசாய பணிகள் முடிந்து நடவுப்பணி தொடங்கியுள்ளது. தஞ்சை, திட்டை, கரம்பயம், கீழகரம்பயம், கொடிக்காலூர், ஆதிமாரியம்மன்கோவில் பகுதிகளில் நடவுப்பணி தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள பெண் விவசாய தொழிலாளர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வயலில் பெண்கள் ஒன்றாக கூடி நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு சில வயல்களில் பெண்கள் கவலைகளை மறந்து நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நாற்று நடுவதை வெகு நாட்களுக்கு பிறகு காண முடிகிறது.
தொடர்ச்சியாக வேலை
இதுகுறித்து விவசாய பெண் தொழிலாளர்கள் கூறுகையில்:- நீண்ட நாட்களுக்கு பின் நடவு வேலை செய்வதால் நடவு பணியின் போது பழைய வாழ்க்கைக்கு திரும்பிய உணர்வு ஏற்படுகிறது. இந்த ஆண்டு இயற்கை அன்னையும், காவிரித்தாயும் கருணை காட்டியுள்ளதால் நடவுப்பணி தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து 3 மாதங்களுக்கு களை எடுத்தல், நெல் அறுவடை பணி என தொடர்ச்சியாக வேலை கிடைக்கும். இதன்காரணமாக எங்கள் வீட்டு பிள்ளைகள் வயிற்று பசி இல்லாமல் பள்ளிக்கூடம் செல்வார்கள் என மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.