< Back
மாநில செய்திகள்
தொடர் மழை:குளச்சல் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தொடர் மழை:குளச்சல் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

தினத்தந்தி
|
2 Oct 2023 10:56 PM IST

தொடர்மழை எதிரொலியாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

குளச்சல்:

தொடர்மழை எதிரொலியாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தொடர் மழை

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளிலும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் கேரை, கணவாய், இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது கணவாய், கிளாத்தி போன்ற மீன்கள் கிடைக்கிறது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலையிலும் மழை பெய்தது.

கடலுக்கு செல்லவில்லை

இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.

குளச்சல் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் கடந்த 28-ந் தேதி மூழ்கியதில் 3 மீனவர்கள் மாயமாகினர்.இதில் கொட்டில்பாடு மீனவர் பயஸ் (வயது 63) என்பவரின் உடல் 30-ந்தேதி மீட்கப்பட்டது. குளச்சலை சேர்ந்த கே.ஆரோக்கியம், ஆன்றோ ஆகியோர் குறித்து தகவல் கிடைக்கவில்லை. அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை.

இதனால் குளச்சல் விசைப்படகினர் நேற்றுமுன்தினம் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஆழ்கடலில் மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகளிலிருந்து மீன்களை இறக்கி விற்பனை செய்யவில்லை. நேற்று அந்த படகுகளிலிருந்து மீன்கள் இறக்கப்பட்டது. அதில் வழக்கமான கணவாய், கிளாத்தி மீன்களே கிடைத்தன. இவை ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் நேற்று காலை கரை திரும்பின. அவற்றில் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

மேலும் செய்திகள்