நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - கடலூரில் பரபரப்பு
|கடலூரில் நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், பழுப்பு நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பழுப்பு நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால், கடந்த 10 ஆண்டுகளாக என்.எல்.சி. நிர்வாகம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே 7 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி சுரங்க விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தி, வேலி அமைக்கும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று, கடலூரில் உள்ள மும்முடிச்சோழகன் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்ய என்.எல்.சி. ஊழியர்கள் சென்றனர்.
அப்போது அங்கு வந்த கிராம மக்கள், நிலங்களை சமன் செய்யும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் நிலங்களை கையகப்படுத்தியதற்கு இன்னும் முழுமையான இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் ஆகியவை இதுவரை வழங்கப்படவில்லை என்றும், இதனை நிறைவேற்றிய பிறகே நிலங்களை சமன்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் நாளை கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலங்களை சமன் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.