கடலூர்: ரெயில்வே கேட் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து; டிரைவரின் அலட்சியத்தால் விளையாட்டாக கியரை இயக்கிய குழந்தைகள்
|கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே வாய்க்காலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு பகுதியில் தனியார் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆலப்பாக்கம், பெத்தாங்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், குழந்தைகள் படிக்கக்கூடிய நிலையில் அவர்களை அந்த கிராமத்திற்கே சென்று பள்ளி வேனில் அழைத்து வருவது வழக்கம்.
அதே போல் இன்று வழக்கமாக பள்ளி வேன் பெத்தாங்குப்பம் மலைப்பகுதி தாண்டி கிராமத்திற்கு சென்ற போது அங்கே ரெயில்வே கிராஸ்ஸிங் இருப்பதால் இரயிலை கடக்க முயன்றபோது ரெயில் வருவதை அறிந்த ஓட்டுநர் தண்டவாளத்தை கடப்பதற்கு முன்னதாக பள்ளி வேனை நிறுத்தியுள்ளார். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்புவந்துள்ளது.
பிறகு வேனை நிறுத்திவிட்டு தொலைபேசி எடுத்துக்கொண்டு கீழே இறங்கி சென்ற நிலையில் பள்ளி வேனில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எதிர்பாராத விதமாக கியர் பாக்சில் கை வைத்ததால் அந்த வேன் பின்புறமாக சென்று தண்டவாளம் அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முற்றிலுமாக வேன் கதவுகள் அடைத்து மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படுகாயமடைந்து உள்ளேயே சிக்கி கொண்டனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வேனின் கண்ணாடியை உடைத்து அந்த குழந்தைகளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தண்டவாளம் அருகே ஓட்டுநர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அலட்சியத்தின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.