< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
11 March 2023 12:02 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி உறுதி அளித்ததன் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் என்.எல்.சி நிறுவனம் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியும் நடைபெற்றது. இதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. என்.எல்.சி நிலக்கரி சுரங்க விவகாரம் கடலூர் மட்டுமல்ல 5 மாவட்ட மக்களின் பிரச்சனை. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவில்லை. கடலூரில் நடைபெறும் அவலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. முழு அடைப்பு போராட்டத்தின் நோக்கத்தை வணிகர்கள், வியாபாரிகள் உணர்ந்துள்ளனர்.

அடுத்த ஆண்டிற்குள் என்.எல்.சியை தனியாருக்கு விற்க போகிறோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ள என்.எல்.சிக்காக அரசு வேகவேகமாக நிலத்தை கையகப்படுத்துவது ஏன்? என்.எல்.சிக்காக நிலம் கொடுத்த மக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கப்படவில்லை. மேலும் வேலை கொடுத்தாலும் உரிய ஊதியத்துடன் வேலை கொடுப்பதில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் என்.எல்.சி வந்த பிறகு ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. என்.எல்.சியால் காற்று மாசடைந்து ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிப்பட்டுள்ளனர். என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் அரசு முரண்பாடான கொள்கையை கடைபிடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்