< Back
மாநில செய்திகள்
கடலூர் சிறை அதிகாரி வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் - சிறை வார்டன் உள்ளிட்ட 2 பேர் கைது...!
மாநில செய்திகள்

கடலூர் சிறை அதிகாரி வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் - சிறை வார்டன் உள்ளிட்ட 2 பேர் கைது...!

தினத்தந்தி
|
2 Sept 2022 4:09 PM IST

கடலூர் சிறை அதிகாரி வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சிறை வார்டன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்,

கும்பகோணம் அருகே சுவாமி மலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவர் கடலூர் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் தனது குடும்பத்தினருடன் மத்திய சிறை அருகே உள்ள உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த 24-ந்தேதி முதல் மருத்துவ விடுப்பில் உள்ள அவர், சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்றார். இதனால் வீட்டில் மணிகண்டனின் தாய் சாவித்ரி, தந்தை ராமலிங்கம், மனைவி பவ்யா (32) மற்றும் 2 மகன்கள் இருந்தனர். இரவு பவ்யா தனது மாமனார், மாமியார் மற்றும் குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு தனித்தனி அறையில் படுத்து தூங்கினர்.

இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் சாவித்ரி கழிவறை செல்வதற்காக எழுந்தார். அப்போது சமையல் அறை ஜன்னல் அருகே மர்மநபர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சாவித்ரியை பார்த்த உடன், ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.

உடனே அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு எழுந்த பவ்யா உள்ளிட்டோர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி அலுவலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் என்பவர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்