கடலூர்
கடலூர் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்
|வங்க கடலில் மோசமான வானிலை நிலவுவதால், கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் முதுநகர்,
வடகிழக்கு பருவ மழை தொடங்கி அவ்வப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றத்தழுத்த தாழ்வு பகுதி நிலவும் சூழலில், தமிழக கடலோர பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் கடலூர் துறைமுகத்திலிருந்து அனைத்து வகையான விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை), மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திரும்பி வர வேண்டும்
ஆழ் கடலில் தங்கி மீன் பிடித்து கொண்டிருக்கும் விசை படகு மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.